தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகர் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை அமைக்கக் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் கோவில், தேவாலயம் மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளதால் கடையை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மீளவிட்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர்: "இப்பகுதியில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க அதிமுக என்றும் உறுதுணையாக நிற்கும். 717 மதுபானக் கடைகளை மூடிவிட்டதாகக் கூறிவிட்டு, மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் மறைமுகமாகப் புதிய கடைகளைத் திறப்பது ஏற்புடையதல்ல.

விலைவாசி உயர்வு மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் இந்த அரசின் போக்கை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், காமராஜ் நகர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மதுபானக் கடையை உடனடியாகக் கைவிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.