வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரைப் பதவி விலகக் கோரியும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் மீது துணை ராணுவம் மற்றும் காவல் துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மாடசாமி மற்றும் மாவட்ட செயலாளர் ராம் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலை உருவானால், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஜந்தர் மந்தராக மாற்றிப் போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கும் வகையில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.