» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீருக்கு 370-வது சட்டப்பிரிவு மீண்டும் வராது: அமித்ஷா திட்டவட்டம்

சனி 7, செப்டம்பர் 2024 8:39:03 AM (IST)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு பின் முதல் முறையாக காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வருகிற 18-ந் தேதி முதல் 3 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக தேசிய மற்றும் உள்ளூர் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் காங்கிரசும், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என தேசிய மாநாடு போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தன.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என பா.ஜனதா ஏற்கனவே கூறியிருந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக 2 நாள் பயணமாக அவர் காஷ்மீர் சென்றார். கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜம்முவில் வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இதை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: காஷ்மீர் மற்றும் ஒட்டுமொத்த இந்திய வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகள், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய காலம் ஆகும். காஷ்மீரில் அமைதி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்திருக்கிறோம்.

இந்த சிறப்பான நிர்வாகம் தொடர்வதற்கு காஷ்மீர் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். காஷ்மீரின் வளர்ச்சியை உறுதி செய்ய எங்களுக்கு 5 ஆண்டுகளை தாருங்கள். தேசிய மாநாடு கட்சியின் செயல்திட்டத்தை நான் ஆய்வு செய்தேன். அரசியல் சட்டப்பிரிவு 370 குறித்து அவர்களது கருத்தை அறிந்தேன். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதாவது அரசியல் சட்டப்பிரிவு 370 என்பது வரலாறு ஆகிவிட்டது. அதை ஒருபோதும் மீண்டும் கொண்டு வரமாட்டோம். 370-வது சட்டப்பிரிவு அரசியல்சாசனத்தின் ஒரு பகுதியாக இனி இருக்காது. இளைஞர்களின் கையில் ஆயுதங்கள், கற்களை கொடுத்து, அவர்களை பயங்கரவாதத்தின் பாதையில் செல்ல வைத்ததைதான் இந்த சட்டப்பிரிவால் செய்ய முடிந்தது.

காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். காஷ்மீரில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச்செய்யும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் குஜ்ஜார்கள், பக்கர்வாலாக்கள், பகடிக்களின் இடஒதுக்கீட்டில் கை வைக்க விடமாட்டோம் என்பதை உமர் அப்துல்லாவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory