» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போராடும் டாக்டர்களுடன் மம்தா திடீர் சந்திப்பு: 34 நாட்களாக இரவு தூங்கவில்லை என உருக்கம்

ஞாயிறு 15, செப்டம்பர் 2024 10:25:52 AM (IST)



மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென சந்தித்து பேசினார். அப்போது தான் கடந்த 34 நாட்களாக இரவு தூங்கவில்லை என உருக்கமாக கூறினார்.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இளநிலை டாக்டர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திமாநில சுகாதாரத்துறை தலைமையகத்தின் எதிரே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர்களின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். அதன்படி கடந்த வியாழக்கிழமை மாலை தலைமை செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு வந்து டாக்டர்களின் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்கிற டாக்டர்களின் நிபந்தனையை அரசு ஏற்காததால் டாக்டர்கள் முதல் மந்திரியை சந்திக்காமல் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு நேற்று மதியம் முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென சென்றார். மம்தாவின் திடீர் வருகையால் டாக்டர்கள் ஆச்சரியமடைந்தனர். எனினும் அவர்கள் மம்தாவை நோக்கி ‘நீதி வேண்டும், நீதி வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மத்தியில் மம்தா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் இங்கு முதல்வர்யாக வரவில்லை. உங்களின் மூத்த சகோதரியாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். பிரச்சினையை தீர்க்க இது எனது கடைசி முயற்சி. நீங்கள் பணிக்குத் திரும்ப விரும்பினால், உங்கள் கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலிப்பதாக உறுதியளிக்கிறேன். நான் தனியாக அரசை நடத்தவில்லை. உங்கள் கோரிக்கைகள் குறித்து தலைமைச்செயலர், உள்துறைச் செயலர், டி.ஜி.பி. ஆகியோரிடம் விவாதிப்பேன்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். யாரேனும் குற்றவாளிகள் எனத் தெரிந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். இதைத்தான் நான் சொல்ல வேண்டும்.நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. நீங்கள் இங்கே இப்படி அமர்ந்திப்பதால் நான் அவதிப்படுகிறேன். நானும் கடந்த 34 நாட்களாக இரவு தூங்கவில்லை. ஏனென்றால் நீங்கள் சாலையில் இருந்தால், நானும் காவலாளியாக விழித்திருக்க வேண்டும்.

பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில், இதேபோன்ற போராட்டங்களை தகர்க்க எஸ்மா சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உறுதியாக இருங்கள், நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன். உங்களுக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டேன். நீங்கள் உன்னதமான பணியை மேற்கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன்.

நானும் மாணவர் இயக்கங்களின் தயாரிப்பு தான், சிங்கூர் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தேன். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார். இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதை அரசுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசும் அவர்களை மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் பங்கேற்குமாறு தலைமை செயலாளர் மனோஜ் பந்த் இ-மெயில் அனுப்பினார்.

அதன்படி மம்தா பானர்ஜியின் கலிகாட் வீட்டுக்கு போராட்டக்குழுவினர் சென்றனர். ஆனாலும் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இந்த பிரச்சினை கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் நேரடி ஒளிபரப்புக்கு வாய்ப்பு இல்லை எனக்கூறிய மம்தா பானர்ஜி, பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

டாக்டர்களிடம் அவர், ‘இன்று (நேற்று) நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதால் நான் காத்திருக்கிறேன். நீங்கள் ஏன் என்னை இப்படி அவமதிக்கிறீர்கள்? ஏற்கனவே 3 முறை காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவுசெய்து இப்படி என்னை அவமதிக்காதீர்கள்’ என வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். மம்தாவின் இந்த வேண்டுதலையும் டாக்டர்கள் ஏற்காததால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இரவு வரை சிக்கல் நீடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory