» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது: அமித்ஷா பேச்சு

ஞாயிறு 15, செப்டம்பர் 2024 10:32:05 AM (IST)

இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. இந்திக்கும், பிற மொழிகளுக்கும் இடையே போட்டி இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்தி தினத்தையொட்டி டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் அகில பாரத அலுவல் மொழி மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தி மொழி சர்வதேச மொழி அந்தஸ்து பெறுவதற்கான விளிம்பில் இருப்பதாக கூறினார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தி தினம் என்பது இந்தியை ஒரு தொடர்பு மொழியாகவும், பொதுவான மொழியாகவும், தொழில்நுட்ப மொழியாகவும், இப்போது சர்வதேச மொழியாகவும் மாற்ற உறுதிமொழி எடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

கடந்த 75 ஆண்டுகளில் இந்தி மொழி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்திக்கு எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டி இல்லை என்பதை இந்த நேரத்தில் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தி நண்பன்தான். அது குஜராத்தியாகட்டும், மராத்தியாகட்டும், தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளி என ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகின்றன, இந்தியும் அவற்றை வலுப்படுத்துகிறது.

இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைர விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியை அலுவல் மொழியாக ஏற்று நாட்டின் அனைத்து உள்ளூர் மொழிகளையும் இந்தி மூலம் இணைப்பதன் மூலம், நமது கலாசாரம், மொழிகள், இலக்கியம், கலை, இலக்கணம் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கி நகர்கிறோம்.

இந்தி என்பது புவிசார் அரசியல் மொழி என்பதை விட புவிசார் கலாசார மொழியாகும். உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய எனது 2 அமைச்சகங்களின் கோப்புகள் மூலம் அனைத்து தகவல் தொடர்புகளும் இந்தி மூலம் செய்யப்படுகின்றன. இந்த நிலையை அடைவதற்கு 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

சர்வதேச மொழியாக மாறும் தருவாயில் உள்ள இந்தி, இன்று ஐ.நா.வின் மொழியாகவும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது மொழியாகவும் உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

முன்னதாக இந்தி மொழி தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்து வீடியோ செய்தியில் கூறியிருந்ததாவது: இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது குஜராத்தி என எந்த ஒரு இந்திய மொழியிலும் நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே அரசியல் நிர்ணய சபையின் எண்ணமாக இருந்தது.

இந்தியை வலுப்படுத்துவதன் மூலம் இந்த மொழிகள் அனைத்தும் நெகிழ்வானதாகவும் வளமானதாகவும் மாறும். மேலும் ஒருங்கிணைப்பு நடைமுறையில் அனைத்து மொழிகளும் நமது கலாசாரம், வரலாறு, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும்.

இந்தி மொழி இயக்கத்தை கவனமாக பார்த்தால், அதில் இடம் பெற்றிருந்த ராஜாஜியாகட்டும், மகாத்மா காந்தியாகட்டும், படேல், லாலா லஜபதிராய், நேதாஜி அல்லது ஆச்சார்யா கிருபாளினி என இவர்கள் அனைவரும் இந்தி பேசாத பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

கோபாலசாமி அய்யங்கார் மற்றும் கே.எம்.முன்ஷி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரித்து, இந்தி மற்றும் பிற அனைத்து மொழிகளுக்கும் வலுவூட்டுவதற்கான அறிக்கையை அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்தது. இந்த 2 தலைவர்கள் கூட இந்தி பேசாத பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

உலகின் வளமான மொழிகளில் நமது மொழிகள் உள்ளன. இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவில் 4 அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அரசுப் பணிகளில் இந்தியை முதன்மைப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்தவும், அலுவல் மொழித் துறையின் இந்த பணியை ஆதரிக்கவும் இந்தி தினமான இன்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory