» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளியே அனுப்பப்பட்டாரா கார்கே? பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம்!

வியாழன் 24, அக்டோபர் 2024 12:15:39 PM (IST)



பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்த போது, காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியே அனுப்பப்பட்டதாக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி புதன்கிழமை பேரணியாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த பேரணியின் நிறைவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவும், சோனியா காந்தியும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வயநாடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் பிரியங்காவுடன் அமர்ந்திருந்த நிலையில், கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே வெளியே அனுப்பப்பட்டதாகவும், தலித் தலைவரை காங்கிரஸ் அவமதித்ததாகவும் கார்கே வெளியே காத்திருக்கும் விடியோவை வெளியிட்டு பாஜக மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட பதிவில், "மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் தலித் தலைவருமான கார்கேவை இன்று வயநாட்டில் அவமதித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்தாலும், அவரை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தி அவமானப்படுத்துவதில் அந்த குடும்பம் பெருமைப்படுகிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட பதிவில், "பிரியங்கா காந்தி முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது எங்கே இருந்தீர்கள் கார்கே? குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்பதால் வெளியே அனுப்பப்பட்டார்.சோனியா குடும்பத்தின் ஆணவம் மற்றும் உரிமையின் பலிபீடத்தில் சுயமரியாதை மற்றும் கண்ணியம் ஆகியவை தியாகம் செய்யப்படுகிறது.

மூத்த தலித் தலைவரையும் கட்சித் தலைவரையுமே இப்படி நடத்தினால், அவர்கள் வயநாட்டு மக்களை எப்படி நடத்துவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் விளக்கம்: பாஜக நிர்வாகிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி பிரணவ் ஜா கூறியதாவது: "இந்த நாட்டை பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும் பொய்யை நாட வேண்டிய நிலைக்கு அரசும், அமைச்சர்களும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.வயநாட்டில் என்ன நடந்தது என்றால், அறையில் ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆகையால், ஓரிரு தலைவர்கள் வெளியே போவதும், ஒருவர் உள்ளே வருவதுமாக இருந்தது. ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. அதனால், காங்கிரஸ் தலைவர் சிறிது நேரம் பொறுமையாக என்ன காத்திருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் கார்கேவும், வேணுகோபாலும் உள்ளே இருப்பதை காணொலியில் உங்களால் காண முடியும். இதைத்தான் அந்த வீடியோ சித்தரிக்கிறது.

ஆனால், இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, பொய் சொல்லவும், அவதூறு பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு பாஜகவின் ஒட்டுமொத்த கூட்டமும் தள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory