» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொடர் கதையாகும் வெடிகுண்டு புரளிகள்: ஒரே நாளில் 80 விமானங்களுக்கு மிரட்டல்!
வெள்ளி 25, அக்டோபர் 2024 8:48:00 AM (IST)
ஒரே நாளில் 80-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இந்திய விமான நிறுவனங்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இ-மெயில் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அனுப்பப்படும் இந்த மிரட்டலால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர்.
மிரட்டல் வந்ததும் அந்த விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்படி எந்த மர்ம பொருளும் சிக்காமல், அந்த மிரட்டல்கள் வெறும் புரளியாக மாறி விடுகின்றன. இதனால் பெருமூச்சு விட்டாலும், தொடரும் இதுபோன்ற மிரட்டல்கள் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அத்துடன் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் நேற்றும் ஒரே நாளில் 80-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன. குறிப்பாக ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 20 விமானங்கள், அகசா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 13 விமானங்கள், அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 5 விமானங்கள் என 80-க்கு மேற்பட்ட விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகி உள்ளன.
இதில் 3 விமானங்கள் சென்னை தொடர்பானவை ஆகும். அந்தவகையில் சிங்கப்பூர்-சென்னை விமானம், சென்னை-பெங்களூரு விமானம், ஜெய்ப்பூர்-சென்னை ஆகிய 3 விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகின.
இவ்வாறு மிரட்டலுக்கு உள்ளான விமானங்கள் அனைத்திலும் உடனே பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டதாகவும், முடிவில் அவை வெறும் புரளி என கண்டறியப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.இந்த விமானங்களையும் சேர்த்து கடந்த 11 நாட்களில் மட்டும் 250-க்கு மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
தொடரும் இத்தகைய மிரட்டல்கள் அரசுக்கும், விமான நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியாக மாறி உள்ளது. அதேநேரம் பயணிகளை தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி வருகிறது. எனவே இந்த மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)
