» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி: பிரதமர் மோடியிடம் சித்தராமையா கோரிக்கை!
வெள்ளி 29, நவம்பர் 2024 3:44:21 PM (IST)
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை காட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. காவிரியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்கும் உபரிநீர்கூட கிடைக்காது என்று தமிழக அரசு இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
எனினும் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தரப்பிலும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தரப்பிலும் மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
குறுகிய கால விவசாய கடன் வரம்பை சரிசெய்தல், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள ரூ. 10,000 கோடி நிதியை விடுவித்தல், மஹாதாயி ஆற்றின் கலசா பந்தூரி திட்டத்திற்கு அனுமதி ஆகிய கோரிக்கைகளை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை காட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோரும் சித்தராமையாவுடன் பிரதமரை சந்தித்துள்ளனர்.
இதன்பின்னர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு பிரியங்கா காந்திக்கு சித்தராமையா வாழ்த்துத் தெரிவித்தார்.