» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சமய விழாவில் மேடை இடிந்து விழுந்து 5 பேர் பலி; யோகி அரசுக்கு அகிலேஷ் கண்டனம்!
செவ்வாய் 28, ஜனவரி 2025 3:31:32 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் யோகி ஆதித்யநாத் அரசை அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவுத்தில் ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ‘லட்டு திருவிழா’ இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அப்போது பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்ந்த ஜெயின் சமூகத்தினர் 30 ஆண்டுகளாக ‘லட்டு மஹோத்ஸவ’த்தை கடைப்பிடித்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த மேடை அமைக்கப்படுவதாகவும் மாவட்ட நீதிபதி அஸ்மிதாலால் தெரிவித்தார். கோயில் பூசாரிகள், பக்தர்களுக்கு லட்டு வழங்கச் சென்றபோது மூங்கில் மேடை இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை. அதனால் தான் மத நிகழ்வுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. உயிர்கள் பலியாகின்றன.
ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பாஜக அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது?. அவர்கள் வெட்கமின்றி ஒப்பாரி வைத்து கூச்சலிடுகிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சி வீணாகவே முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.