» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஹுசைனி மறைவு: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்!,
செவ்வாய் 25, மார்ச் 2025 5:07:23 PM (IST)

தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஹுசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்காப்புக் கலை ஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது.
புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹுசைனி காலமானார் என்பதை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். தற்காப்புக் கலை குரு ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து... சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன்.
இந்த மாதம் 29ம் தேதி சென்னை சென்று ஹுசைனியைப் பார்க்க முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னையில், ஹுசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100 சதவீதம் பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ''நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது'' என்று அவர் கூறினார்.
ஆனால், விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு, அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் 'பிளாக் பெல்ட்' பெற பயிற்சி பெற்றேன். அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், நான் 'தம்முடு' படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது.
ஹுசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டைப் பிரபலப்படுத்த ஹுசைனி பாடுபட்டார். ஹுசைனியின் திறமைகள், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முகத் திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினார்.
சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்தச் செல்லும்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹுசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. ஹுசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
