» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!

சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)



இண்டிகோ விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட மணமக்கள், கர்நாடக மாநிலத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் விமான சேவைகள் கடந்த 4 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து பிற பகுதிகளுக்கு திருமணம், வேலை, மருத்துவ சிகிச்சைக்கு செல்லவிருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு புதுமண தம்பதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் பரிதவித்த சம்பவமும் இந்த இண்டிகோ விமான சேவை ரத்தால் அரங்கேறியுள்ளது. 

கர்நாடக மாநிலம் உப்பள்ளியை சேர்ந்தவர் மேதா க்‌ஷீரா சாகர். இவர் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அதுபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர் சங்கம தாஸ். இவரும் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 23-ஆம் தேதி புவனேஸ்வரில் திருமணம் நடந்தது. இதில் மேதாவின் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றுவிட்டு கடந்த 28-ஆம் தேதி இண்டிகோ விமானத்திலேயே பெங்களூரு வந்து, பின்னர் உப்பள்ளி சென்றனர்.

மேலும் உப்பள்ளியில் மணமக்களுக்கு 2-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மேதாவின் பெற்றோர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். அதுபோல் மணமக்களும் புவனேஸ்வரில் இருந்து இண்டிகோ விமானத்தில் பெங்களூருவுக்கு வர முன்பதிவு செய்திருந்தனர்.

கடந்த 2-ஆம் தேதி காலை அவர்கள் புவனேஸ்வரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வர புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் 5 மணி நேரமாக விமானத்திற்கு காத்திருந்தனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அங்கேயே பரிதவித்தனர்.

ஆனால் திருமண வரவேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேதாவின் பெற்றோர் உப்பள்ளி குஜராத் பவனில் கோலாகலமாக செய்து மணமக்களுக்காக காத்திருந்தனர். விமானம் ரத்து செய்யப்பட்டதால் மணமக்கள் புவனேஸ்வரில் சிக்கி தவிப்பது மேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. எனவே மணமக்கள் புவனேஸ்வரில் இருந்து காணொலி காட்சி மூலம் உப்பள்ளியில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதற்காக உப்பள்ளி குஜராத் பவனில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு, புவனேஸ்வரில் இருந்தப்படி மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக மணமக்கள் தங்களால் வர முடியாத காரணம் பற்றி கூறியதுடன் மன்னிப்பு கோரினர். அதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory