» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது

சனி 9, மே 2026 11:35:05 AM (IST)

நாசிக்கில் செயல்பட்ட ஐ.டி., நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய பெண் அதிகாரி நிடா கான் நேற்று கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவின் நாசிக்கில் பிரபல ஐ.டி., நிறுவனத்தின் பி.பி.ஓ., செயல்பட்டு வந்தது. இங்கு பணிபுரிந்த 18 - 25 வயதுள்ள பெண் ஊழியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் அத்துமீறல் உட்பட, பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஐ.டி., நிறுவனத்தில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதில், அங்கு பணிபுரிந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஊழியர்கள், பெண் ஊழியர்களை கட்டாய மதமாற்றம் செய்தது உறுதியானது.

மறுத்த பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. நிறுவனத்தில் மனிதவளப் பிரிவு அதிகாரியாக இருந்த நிடா கான், 27, பாதிக்கப்பட்ட பெண்களை புகார் அளிக்க விடாமல் தடுத்தது, அவர்களை கட்டாயப்படுத்தி, 'ஹிஜாப்' எனப்படும், முகத்தை மறைக்கும் துணியை அணிய சொன்னது, மதமாற்றத்துக்கு துாண்டியது போன்ற புகார்களுக்கு உள்ளானார்.

மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மற்ற நபர்களுக்கு, அவர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கட்டாய மதமாற்றம், பாலியல் தொல்லை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு பேரை கைது செய்தனர்.

டேனிஷ் ஷேக், தவுசிப் அத்தார் உட்பட ஏழு ஆண்களும், பாலியல் புகார்களை விசாரிக்கும், 'போஷ்' குழுவில் இருந்த அஷ்வின் சைனானி என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.தலைமறைவாக இருந்த நிடா கானை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, கர்ப்பமாக இருப்பதால், முன்ஜாமின் வழங்கக் கோரி நிடா கான் தாக்கல் செய்த மனுவை நாசிக் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிடா கான் அடுத்தடுத்து தான் தங்கியிருந்த இடங்களை மாற்றியதால், அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், சம்பாஜிநகரில் உள்ள நாரேகாவ்ன் பகுதியில் தன் உறவினர் வீட்டில் நிடா கான் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் அங்கு சென்றனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன் உறவினர்களுடன் இருந்த நிடா கான் கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மருத்துவ பரிசோதனைக்கு பின் நாசிக் அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாசிக் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி கவுன்சிலருக்கு தொடர்பு சத்ரபதி சம்பாஜிநகரின் கவுன்சிலரான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியைச் சேர்ந்த மதீன் படேலுக்கு சொந்தமான இடத்தில், நிடா கான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாரேகாவுன் பகுதியில் நிடா கானுக்கு அடைக்கலம் வழங்கியதை கவுன்சிலர் படேல் ஒப்புக்கொண்டார்.  அவரையும் வழக்கில் சேர்த்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory