» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு: ஜனநாயக கட்சி ஆதரவு

செவ்வாய் 23, ஜூலை 2024 8:24:18 AM (IST)

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபர் பெயரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறினர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன். எனவே ஜனநாயக கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து டிரம்பை வீழ்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டஎம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்த அதிபர் ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய அதிபர் வேட்பாளரை முடிவு செய்ய சிகாகோவில் அடுத்த மாதம் 19-ந் தேதி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகே அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இனிமேல் தேர்தல் பிரசாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் டிரம்புக்கு ஏற்பட்டு இருக்கிறது.இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், `ஜோ பைடன் மட்டுமல்ல. அவரை சுற்றியிருக்கும் யாருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி கிடையாது. ஏனெனில் அவர்கள் நாட்டை அழித்துக்கொண்டு இருக்கின்றனர்.

நேர்மை இல்லாத ஜோ பைடன் பொய், போலி செய்திகளால் மட்டுமே அதிபர் ஆனார். இதனால் தற்போது அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். எனவே பைடனை விட அவர் வேட்பாளராக அறிவித்துள்ள கமலா ஹாரிசை எளிதில் வீழ்த்தி விடுவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory