» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

வியாழன் 26, ஜூன் 2025 10:48:14 AM (IST)



பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று  சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ராஜ்நாத் சிங் பேசியதாவது: "சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், உலகளாவிய ஒத்துழைப்பு இன்றி தனியாக நிர்வகிக்க முடியாது.

நமது பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம். இந்த சவால்களை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கை தேவை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும்.

சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இதுபோன்ற இரட்டை நிலைபாடு கொண்டவர்களை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயக்கம் காட்டக்கூடாது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாதக் குழு கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில், ஒரு நேபாள நாட்டவர் உள்பட 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மத அடையாளத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் வடிவம், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாத தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்க ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்தியா வெற்றிகரமாகத் தொடங்கியது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory