» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்

ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை பெய்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. வனப்பகுதியில் கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி அமைந்துள்ளது. மேலும் அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.

இந்நிலையில் நள்ளிரவு கெர் கவுன்டியில் திடீர் மழை பெய்தது. அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்தது. சுமார் 3 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 3 அல்லது 4 மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை ஒருசில மணி நேரத்தில் கொட்டியது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இருந்து வெளியேறிய அதிகபடியான தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் ஏறி தஞ்சம் அடைத்தனர். வனப்பகுதி மற்றும் நகரங்களை இணைக்கும் சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பேரிடர் மீட்புத்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலமாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் மேற்கூரைகளில் தஞ்சம் புகுந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகினர். இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட வனப்பகுதியில் ஆற்றங்கரையோரம் கோடைக்கால முகாம் அமைத்து தங்கியிருந்த 25 சிறுமிகள் திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டெக்சாஸ் வெள்ளம் அதிர்ச்சி அளிக்கிறது எனவும், தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory