» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதி: டிரம்ப்

செவ்வாய் 20, ஜனவரி 2026 3:45:27 PM (IST)

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/TrumpUSAPresident_1768904331.jpgஅமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். இதனால் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதற்கான முடிவு என்னவென தெரிவதற்குள், வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை கொள்முதல் செய்துள்ளார். இதன்பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டினார். தொடர்ந்து, கிரீன்லாந்து மீதும் டிரம்ப் குறி வைத்துள்ளார்.

இதுபற்றி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன.

எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறினார். ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பணியை நிறுத்தி வைக்கும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிப்ரவரி 1-ந்தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பேன் என்றார். இந்த வரி விதிப்புகள் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் என கூறினார்.

டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த வரி விதிப்புகள் இருக்கும் என்றார். அவரிடம் வரி விதிப்பு அச்சுறுத்தல்களை தொடர்வீர்களா? என கேட்டதற்கு, அதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

எனினும், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாதுகாப்பு படைகளை அனுப்புவீர்களா? என்ற கேள்விக்கு, பதில் இல்லை என கூறினார். இதனால், தாக்குதல் நடத்தும் திட்டத்தில் டிரம்ப் இல்லை என கூறப்படுகிறது. எனினும், இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பிற 7 உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என உறுதியுடன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory