» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியது. பின்னர் ஏப்ரல் 8-ல் போர் நிறுத்தப்பட்டு, ஜூன் 17-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், ஜூலை 13-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது.ஈரானின் ராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
தாக்குதல் நிறுத்தம் குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் உருவெடுத்துள்ளது. அந்த நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்பு போலச் செயல்படுகிறது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா முழுவீச்சில் தயாராக உள்ளது.
இருப்பினும், போரை நிறுத்துமாறு ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என அந்நாடுகள் வலியுறுத்துகின்றன. அதை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட வேண்டும். ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. உலக நன்மை கருதி இந்தப் போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவோடு இணைந்து போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலும் உறுதி அளித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்
வளைகுடா நாடுகளின் சமரச முயற்சி:
அமெரிக்காவின் தாக்குதல் நீடித்தால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தகர்ப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகள் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான், அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் விரிவாகப் பேசியதைத் தொடர்ந்தே இந்த போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் எதிர்வினை:
போர் நிறுத்த அறிவிப்பு குறித்துப் பேசிய ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சையத் மஜித் இப்னு ரெஸா, "அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கை உளவியல் ரீதியானது; எதற்கும் அஞ்சாமல் அனைத்துச் சூழல்களுக்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், சவுதி அரேபியா மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களும் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துவது குறித்துத் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)

சீனாவை சூறையாடிய 'நவுல்' புயல்: 350 விமானங்கள் ரத்து - 7¼ லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
திங்கள் 27, ஜூலை 2026 8:24:00 AM (IST)


