» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பரமக்குடி செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள்: தென்காசி எஸ்பி விளக்கம்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:14:00 AM (IST)
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வோர்கள் கடைபிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு விதிகளை தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 11.09.2024 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்வோர்கள் கடை பிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் தலைமையில் ஆலோசணைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அஞ்சலி செலுத்த செல்வோர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள்
1. அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சொல்வோர் பயணியர் பயணிக்க கூடிய சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள், பாரம் ஏற்றும் வாகனங்கள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை, குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், டிராக்டர் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை
2. சொந்த வாகனங்கள் மூலம் (கார் மட்டும்) செல்பவர்கள் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 06.09.2024 தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியின் உட்புறம் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
3. சொந்த வாகனங்களில் பரமக்குடியை நோக்கி செல்பவர்கள் அவர்களுக்கென அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும்.
4. வாகனத்தின் கதவின் ஜன்னல் வழியே, தகவை திறந்து கொண்டோ, மேற்கூரையில் அமர்ந்து /நின்று கொண்டோ பயணம் செய்யக் கூடாது. அவ்வாறு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
5. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
6. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் கொடிகள் போன்றவை பொருத்திச் செல்லக் கூடாது.
7. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோசங்களை எழுப்பவோ கூடாது.
8. ஜாதி உணர்வை தூண்டும் வகையில், தலைப்பாகை, ரிப்பன், டீசர்ட், தொப்பி போன்றவற்றை அணியக்கூடாது.
9. வாகனங்களில் செல்லும்பொழுது செல்லும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. காவல்துறை அறிவுறுத்தும் விதி முறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.
10. அஞ்சலி செலுத்துவதற்காக, கிராமங்களிலிருந்து இவ்விழாவுக்கென ஒதுக்கப்படும் அரசு பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும்.
11. வரையறுக்கப்பட்ட அரசு பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள், டிரம்ஸ்செட் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.
12. வரையறுக்கப்பட்ட அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.
13. வரையறுக்கப்பட்ட அரசு பேருந்துகளில் பயணம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பயணம் ஆரம்பிப்பதற்கு முன்பே செலுத்த வேண்டும். அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.
14. வரையறுக்கப்பட்ட அரசு பேருந்துகள் 11.09.2024 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும்.
15. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும்பொழுது அவர்களுடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி செல்ல வேண்டும்.
16. நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே நடைபயணமாக செல்லலாம்.
17. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றை நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் ராமநாதபுர மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.
18. சொந்த ஊரில் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு சம்பந்தமான எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். ஊர்வலம் எவ்வகையிலும் அனுமதி கிடையாது. பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.
19. பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் வேறு எவரும் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை.
20. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின்தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.09.2024-ஆம் தேதி வரை அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
21. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2024 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
22. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிகாட்டுதல்களை மீறி செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.