» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத்தகராறில் மாமனாரை குத்திக்கொன்ற மருமகன் கைது: நெல்லை அருகே பயங்கரம்!
சனி 11, ஜனவரி 2025 8:53:38 AM (IST)
நெல்லை அருகே கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறை சமதானம் செய்ய முயன்ற மாமனாரை சரமாரியாக குத்திக் கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையை அடுத்த பேட்டை திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (60), கூலி தொழிலாளி. இவருடைய மகள் ராஜலட்சுமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சுடலைமுத்து (40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே இசக்கிமுத்து மகள் ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்று தம்பதியரை சமாதானம் செய்து வைக்க முயன்றார். அப்போது அவருக்கும், மருமகன் சுடலைமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமனார் இசக்கிமுத்துவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். உடனே இசக்கிமுத்துவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்துவை கைது செய்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சுடலைமுத்து மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்தனர். நெல்லை அருகே கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறை சமாதானம் செய்து வைக்க முயன்ற மாமனாரை மருமகன் சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.