» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!

புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

சென்னை - நெல்லை இடையே செவ்வாய்கிழமை நீங்கலாக வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏ.சி. வசதிகளுடன் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் வழக்கம் போல், இன்று காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டது.

காலை 8.25 மணியளவில் மதுரையை கடந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை நெருங்கியது. குறிப்பாக, வடமதுரை அருகே வந்து கொண்டிருந்தபோது, ரயில் பெட்டிக்குள் திடீரென புகை கிளம்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு அருகில் உள்ள பெட்டிக்குள் சென்றனர்.

பெட்டியில் இருந்த கேட்டரிங் ஊழியர்கள் புகை மூட்டம் குறித்து என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் புகை வந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். ஏசி காற்று வரும் இடத்தில் இருந்து புகை வந்தது தெரியவந்தது. சற்று நேரத்தில், அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பிறகு வந்தே பாரத் ரயில் அங்கிருந்து புறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிர்ச்சியில் இருந்து மீண்ட பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தனர். வந்தே பாரத் ரயிலில் புகை வந்த சம்பவம் சிறிது நேரம் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory