» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி ரவுடி கொலையில் 4 பேர் அதிரடி கைது
வியாழன் 17, ஜூலை 2025 8:40:45 AM (IST)
சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார் (28), மீனவர். இவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளாள். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதன்குமார், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த கப்பல் மாலுமி மரடோனா என்பவரை கொலை செய்த வழக்கில் மதன்குமாரை தூத்துக்குடி வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே தூத்துக்குடி கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அவர் சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 10-ந் தேதி முதல் தினமும் 2 முறை கையெழுத்திட்டு வந்தார். இதற்காக மதன்குமார் தனது மனைவியுடன் சேலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவர் மனைவியுடன் காவல் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த ஹரிபிரசாத் (26), கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்ற வல்லரசு (24), அலங்கார்தட்டு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (26), பொட்டல்காடு நடுத்தெருவை சேர்ந்த சந்தோஷ் (22) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மதன்குமாருக்கும், குட்டி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குட்டியை, மதன்குமார் உள்பட 2 பேர் கொலை செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மதன்குமார், ஷியாம் என்பவருடன் சேர்ந்து பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.
அப்போது அவர்களுக்கும் எதிர்கோஷ்டியை சேர்ந்த ஹரிபிரசாத், கிருஷ்ணகாந்த், பூபதி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் தரப்பினர் மதன்குமாரை கடந்த ஆண்டு கொல்ல முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கில் ஹரிபிரசாத், பூபதி, கிருஷ்ணகாந்த் ஆகியோரை தூத்துக்குடி வடக்கு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மதன்குமார் தரப்பினர் ஹரிபிரசாத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
இதையறிந்த ஹரிபிரசாத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மதன்குமாரை கொல்ல திட்டமிட்டார். இதனால் மதன்குமாரின் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது நண்பர்கள் பெயரில் போலி ஐ.டி.யை உருவாக்கி ஹரிபிரசாத் தரப்பினர் அவரிடம் எங்கே இருக்கிறீர்கள் என்று சாட் செய்து உள்ளனர். அவர்கள் நண்பர்கள் தான் என்று நம்பி, சேலத்தில் இருக்கும் விவரத்தை மதன்குமார் இன்ஸ்டாகிராமில் தகவலை பரிமாறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பே சேலம் வந்து மதன்குமார் எங்கெல்லாம் செல்கிறார்? என்பதை நோட்டமிட்டனர். சம்பவத்தன்று மதன்குமார் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மதன்குமாரின் உடல் நேற்று முன்தினம் இரவு அவருடைய மனைவி மோனிஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

NAAN THAANJul 18, 2025 - 10:49:17 AM | Posted IP 104.2*****