» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு

வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் வணிகவியல் 3-ம் ஆண்டு அரியருக்கான கணக்கியல் மேலாண்மை பாடத்தேர்வு நடைபெற இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 302 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்ட போது கணக்கியல் மேலாண்மை பாடத்திற்கு பதிலாக சில்லறை மேலாண்மை பாட வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்வு நடைபெற்ற கல்லூரிகளில் இருந்து முதல்வர்கள், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

பல்கலைக்கழகம் சார்பில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மெயில் மூலமாக கணக்கியல் மேலாண்மை பாட வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர்.

இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாலசுப்பிரமணியம் கூறுகையில், பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஒரு வாரத்திற்கு முன்பாக தான் அச்சிடுவதற்கு சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

அவர்கள் வினாத்தாளை அச்சிட்டு பேக்கிங் செய்து பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பினர். மாணவர்களுக்கு எந்த தேதியில் தேர்வு நடைபெறுகிறது என்பதை அறிந்து அதற்கான வினாத்தாளை நாங்கள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்போம்.

நேற்று நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாளை பிரித்து பார்த்தபோது அதில் தேர்வு பாடத்திற்கான குறியீட்டு எண் சரியாக இருந்தது. ஆனால் அதில் சில்லறை மேலாண்மை பாடத்திற்கான வினாத்தாள் இருந்தது பின்னர் தான் தெரியவந்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர். வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory