» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ரூ.1¼ கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கு: விஷம் குடித்த கஞ்சா வியாபாரி சாவு

செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:23:15 AM (IST)

நெல்லையில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்த கஞ்சா வியாபாரி உயிரிழந்தார்.

ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக பெருமளவில் போதைப்பொருள் கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஒரு சிலரது செல்போன் சிக்னல் செயல்பாடுகள் மற்றும் அவர்களது உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

நேற்று முன்தினம் மினி லாரி மற்றும் ஒரு காரில் கஞ்சா அதிகளவில் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் அனிதா மேரி ஆகியோர் தலைமையிலான போலீசார் கஞ்சா கும்பலை பிடிக்க தூத்துக்குடி-நெல்லை ரோட்டில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர்.

ஒவ்வொரு வாகனமாக சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த மினி லாரி, கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசாரும் வாகனங்களில் சினிமா காட்சிபோல் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். பாளையங்கோட்டை அருகே பொட்டல் விலக்கு பகுதியில் மினி லாரியை மடக்கிப் பிடித்தனர்.

அதில் 80 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி லாரியை ஓட்டி வந்த கங்கைகொண்டானை சேர்ந்த நித்திஷ்குமார் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் சென்ற காரை தச்சநல்லூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரில் 140 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தன. இரண்டு வாகனங்களில் இருந்தும் மொத்தம் ரூ.1¼ கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா சிக்கியது.

இது தொடர்பாக கங்கைகொண்டானை சேர்ந்த கலைஞர் பாண்டியன் மகன் சுரேஷ்குமார் (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கலைஞர் பாண்டியனும் பிரபல கஞ்சா வியாபாரியாக இருந்தார். எனவே அவர் உள்பட மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கலைஞர் பாண்டியன் நேற்று முன்தினம் திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேர் கைதான நிலையில் கார் டிரைவர் அஜித், கருப்பசாமி மற்றும் மதன் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரிய அளவில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் கஞ்சா வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory