» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவி கொலை: ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனா - கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு!

வெள்ளி 13, மார்ச் 2026 8:14:06 PM (IST)



தூத்துக்குடி அருகே உயிரிழந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற வந்த தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

ஏற்கனவே தூத்துக்குடி எம்.பி கனிமொழி வந்தபோது கிராம மக்கள் முற்றுகையிட்ட நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா வேடநத்தம் கிராமத்திற்கு வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனாவைக் கண்டதும் ஆவேசமடைந்த கிராம மக்கள், "யார் இவர்? எதற்காக இப்போது வருகிறார்? நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எங்கே சென்றார்? மாணவியின் மரணத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்" என முழக்கமிட்டனர்.

அப்போது மாணவியின் அத்தை சுப்புலட்சுமி என்பவர் கண்ணீர் மல்கக் கூறியதாவது: "நாங்கள் ஏற்கனவே ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறோம். எதற்காக அரசியல் கட்சிகள் வந்து எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள்? நீங்கள் வருவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்கள் குழந்தையின் கோலத்தை நினைத்து எங்களால் மீள முடியவில்லை. நீங்கள் பேட்டி கொடுத்துவிட்டுப் போய்விடுவீர்கள், ஆனால் காலம் முழுவதும் வேதனைப்படப் போவது அவளது தாய்தான். நாங்கள் காசு, பணமோ பதவியோ எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவே இல்லை."இவ்வாறு ஆவேசமாகப் பேசிய அவர், வேதனையில் மயங்கி விழும் நிலைக்குச் சென்றார். 

அவரை ஆதவ் அர்ஜுனா மற்றும் அங்கிருந்தவர்கள் அமர வைத்தனர். உறவினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களை வெளியே இருக்கும்படி கேட்டுக்கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுமார் 20 நிமிடங்கள் வீட்டிற்குள் இருந்தார். அவர் வெளியே வந்தபோதும் ஊர் மக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்றார்.

செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சியின் தலைவர் விஜய் மாவட்டத்திற்கு வருகை தரும்போது, மாணவியின் பெற்றோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். நிகழ்வின் போது தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் உடனிருந்தார்.


மக்கள் கருத்து

அநியாயம் பண்ணாதீங்க பத்திரிக்கையாளர்களேMar 14, 2026 - 06:14:29 PM | Posted IP 162.1*****

திமுக விரட்டி விட்ட செய்தி போட்டேங்கன்னா நியாயம் ..ஏன் இப்டி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory