» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாரதிய ஜனதா ஆயத்தம் : தூத்துக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனை!

ஞாயிறு 21, ஜூன் 2026 8:47:19 AM (IST)



வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க பாஜகவினர் தீவிர களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசினர். 

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் மற்றும் தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு எதிர்காலத் தேர்தல் பணிகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினர்.

கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அணி மற்றும் பிரிவு தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, அவர்களின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆயத்தங்கள் குறித்துக் கருத்துகள் கேட்கப்பட்டன. கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கப்படும் என நிர்வாகிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் பேசுகையில், "கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கும் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க அணி, பிரிவு மற்றும் கிளை மட்டங்களில் இருந்து தீவிர களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு அல்ல. தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகிய உயர்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இயக்கமாகும். கிராமம் முதல் தேசிய அளவு வரை வலுவான நிர்வாகக் கட்டமைப்பு, அர்ப்பணிப்பு மிக்க தொண்டர் பலம் மற்றும் தொடர்ந்து புதிய தலைவர்களை உருவாக்கும் திறன் ஆகியவை கட்சியின் மிகப்பெரிய பலமாகும். எந்த சூழலிலும் கட்சியின் பயணத்தை தடுக்க முடியாத வலிமையை இந்த அமைப்பே வழங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.

தேசிய மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முக்கியமான ஜனநாயக களமாகும். நிர்வாகிகள் வீடு தோறும் சென்று கட்சியின் சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக (Booth level) நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்தி, தேர்தலை முழுமையான திட்டமிடலுடன் எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணை தலைவர் சிவராமன் மற்றும் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory