» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் அடித்துக்கொலை: 3பேர் கைது!

புதன் 1, மே 2024 11:31:06 AM (IST)

கோவையில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபரை அடித்துக்கொலை செய்த பெண்ணின் அண்ணன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை அடுத்த இருகூர் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ராதிகா. இவர்களின் மகன் ஜெயச்சந்திரன் (23). இவர் கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி புரிந்து வந்தார். ஜெயச்சந்திரனுக்கு அங்குள்ள காமாட்சி புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

இதையடுத்து காதலர்கள் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இந்த காதல் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இதனிடையே இவர்களின் காதல் விவகாரம் அந்த சிறுமியின் அண்ணனான சுருளி என்ற சுரேந்திரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், ஜெயச்சந்திரனை சந்தித்து தனது தங்கையுடனான காதலை கைவிடும் படி தெரிவித்தார். மேலும் காதலுக்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமியின் அண்ணன் சுருளி என்ற சுரேந்திரனுக்கு இந்த காதலில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜெயச்சந்திரனை சந்தித்து தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு உள்ளார். ஆனால் ஜெயச்சந்திரன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுருளி என்கிற சுரேந்திரன் தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி சுருளி என்கிற சுரேந்திரன், வெள்ளலூரில் ஜெயச்சந்திரன் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த ஜெயச்சந்திரனிடம், காதல் தொடர்பாக பேச வேண்டும். எனவே தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படி தெரிவித்தார். இதையடுத்து ஜெயச்சந்திரனும், அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மோட்டார் சைக்கிள் நேராக கோவையை அடுத்த தடாகம் பகுதிக்கு சென்றது. அங்கு சுரேந்திரன் மற்றும் அவரின் நண்பர்களான ஜெயராஜ் என்கிற சுள்ளான், கார்த்திக், நவீன், குழந்தை என்கிற அபிவிஷ்ணு ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜெயச்சந்திரனிடம், சுரேந்திரனின் தங்கையை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளனர்.ஆனால் ஜெயச்சந்திரன் தன்னால் சுரேந்திரனின் தங்கையை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கருந்த சவுக்கு கட்டைகளை எடுத்து ஜெயச்சந்திரனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சுரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பிய ஜெயச்சந்திரனை பார்த்த அவரது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். 

அதனால் உடனடியாக ஜெயச்சந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஜெயச்சந்திரனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் சிறுமியின் சகோதரன் சுருளி என்கிற சுரேந்திரன், அவரது நண்பர்கள் ஜெயராஜ் என்கிற சுள்ளான், கார்த்திக், நவீன், குழந்தை என்கிற அபிவிஷ்ணு ஆகிய 5 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போத்தனூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர்கள் 5 பேரையும் பிடிக்க போத்தனூர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் இருகூர் பகுதியில் பதுங்கி இருந்த சிறுமியின் அண்ணன் சுருளி என்கிற சுரேந்திரன் (23), அவரது நண்பர்கள் ஜெயராஜ் என்கிற சுள்ளான் (22), கார்த்திக் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீன், குழந்தை என்கிற அபிவிஷ்ணு ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory