» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பறவை காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை : ஆட்சியர்

புதன் 1, மே 2024 11:40:39 AM (IST)



கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கான அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் சில வாத்துகள் பறவை காய்ச்சல் நோயால் இறந்தன. அப்பகுதியில் அதனை தொடர்ந்து சுமார் 45,000 கோழிகள் மற்றும் வாத்துகள் நோய் பரவலை தடுப்பதற்காக அழிக்கப்பட்டன.

பறவைக் காய்ச்சலானது பறவை இனங்களைத்தாக்கும் ஒரு வைரஸ் தொற்றுநோய். இந்நோய் ஆங்கிலத்தில் AVIAN INFLUENZA மற்றும் BIRD FLU என அழைக்கப்படுகிறது. இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள் மற்றும் வனப்பறவைகள் ஆகியவற்றை முக்கியமாகத் தாக்கும். மனிதர்களையும் இந்நோய் தாக்கும். பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளுள் பலவகைகள் இருந்தாலும் தற்போது பரவி வரும் எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. 

நோய் பாதித்த பண்ணைகளின் இறந்த கோழிகள், கோழிக் கழிவுகள், பண்ணை உபகரணங்கள், முட்டை தட்டுகள், கோழித் தீவனம், தண்ணீர் உடைந்த முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிப்பு இயந்திரங்கள், பறவைக்கூண்டுகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ் நேரடித் தொடர்பு மற்றும் சுவாசக்காற்றின் மூலம் கோழிகள் மற்றும் மனிதர்களைத் தாக்கும்.

பறவை காய்ச்சலின் அறிகுறியானது தீவிர நோயுற்ற கோழிகள் எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாமல் 48 மணி நேரத்திற்குள் இறந்துவிடும், வயிற்றுப்போக்கு, தூங்கிய நிலை, கொண்டையில் நீல நிறம், கண், இமை, தலை வீக்கம், தள்ளாடுதல், மூச்சுத்திணறல், அதிக உயிர்ச்சேதம், முட்டை உற்பத்தி குறைவு ஆகியவை ஏற்படும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் இறைச்சி வகை பறவைகளில் இது போன்ற அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உடனடியாக கால்நடை மருத்துவர்களிடம் காண்பித்து தடுப்பூசி போடுவதன் மூலம் பறவை நோயை குணப்படுத்துவதோடு பரவமால் தடுக்கலாம்.

மேலும் சரியாக சுத்தம் செய்யப்பட்டு சமைக்கப்பட்ட முட்டை மற்றும் இறைச்சிகளை உண்ணுவது பாதுக்காப்பான முறையாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்கள், விசேஷங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், உணவகங்களிலும் தற்காலிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து முட்டைகள், இறைச்சி வகை பறவைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்யாமாலும் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை மற்றும் காக்கவிளை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கண்காணிப்பில் ஈடுபடுவோர் 8 மணி நேர பணிச்சுற்றுகளில் 3 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கோழி மற்றும் உபபொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் திரும்ப அனுப்பப்படுகிறது. சரக்கு வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் அனைத்து கோழிப் பண்ணைகளிலும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் நோய் கிளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுதல் அவசியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக காவல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகள் வாயிலாக பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகர் நல அலுலவர் மரு.ராம்குமார், உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர், கோட்ட உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory