» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊரகப் பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
வியாழன் 11, ஜூலை 2024 11:55:06 AM (IST)
ஊரகப் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தருமபுரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மற்றும் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான ”மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான முகாமினை தருமபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மாநில அளவில் இத் திட்டத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இம்முகாம்களில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் முகாம்களில் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து முடிவுற்ற திட்டப்பணிகள் - தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சித்துறை, ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்தார்.
கூட்டுறவுத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகர பேருந்துகளை கொடியசைத்துத் துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த விழாவில் மாநில வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.