» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்
வியாழன் 11, ஜூலை 2024 3:45:37 PM (IST)
நாகர்கோவிலில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (11.07.2024) நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கொடியசைத்து துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் "உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். மேலும் நமது நாட்டின் மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்வுக்கும், நமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது முதன்மையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்திட மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம். அதற்கு பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்ய வேண்டும். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்று வருட இடைவெளி விட வேண்டும். இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும் காப்பர் டி, அந்தாரா கருத்தடை ஊசி, சாயா கருத்தடை மாத்திரிகைகள் இவற்றில் ஏதேனும் ஒரு தற்காலிக தடுப்பு முறையினை மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனையின் படி பின்பற்ற வேண்டும்.
மேலும் இரு குழந்தைகளுக்குப் பின் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சையான என்.எஸ்.வி என்ற முறையினை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் ஆபத்தான விஷயமாகும். இளம் வயது திருமணத்தில் பிரசவ சிக்கல்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு பெரும்தடையாகவும் இருக்கும். இளம் வயது திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் தேவையான இடைவெளி, தாய்மார்களின் உடல்நலத்தை பாதுகாத்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது, இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பத்தை தடுப்பது, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை அதிகரிப்பது, வறுமையை ஒழிப்பது உள்ளிட்டவை இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மையப்பொருளாகும் என்பதோடு, குடும்ப நல திட்டத்தை மக்கள் இயக்கமாக மாறச் செய்ய நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
முன்னதாக கலைமாமணி பழனியா பிள்ளை அவர்களின் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், சிலப்பாட்ட வீரர்களின் சிலப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் உலக மக்கள் தொகை உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும் விழிப்பணர்வு ரதம் மற்றும் சல்வேஷன் ஆர்மி கேத்தரின் பூத் நர்ஸிங் கல்லூரி மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பில் முடிவுற்றது.
நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ், மாவட்ட நல அலுவலர் மீனாட்சி, துணை இயக்குநர்கள் சகாய ஸ்டீபன் ராஜ் (மருத்துவம் ஊரக நலப்பணிகள் குடும்பநலம்(பொ)), சுபைர்ஹசன் முகமதுகான் (காசநோய்), கிரிஜா (தொழுநோய்), மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகீலா பானு, சல்வேஷன் ஆர்மி கேத்தரின் பூர் மருத்துவமனை நிர்வாகி மேஜர்.ஸ்வாமிதாஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், புள்ளியியல் உதவியாளர் ராமச்சந்திர கவிதா, சிலம்பாட்ட கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.