» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது: அமைச்சர் முத்துசாமி
வியாழன் 11, ஜூலை 2024 3:52:58 PM (IST)
டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: அண்டை மாநிலத்தில் இருந்து சாராயத்தை வாங்கி குடித்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்த முடியாது. அனைவருக்கும் இது நன்றாக தெரிந்ததுதான். ஆக, காவல்துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.
500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இன்னும் 1,000 கடைகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது; அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் எண்ணமாக உள்ளது. மதுப்பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
....Jul 11, 2024 - 04:30:50 PM | Posted IP 162.1*****