» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: பெண் வக்கீல் உள்பட 3 பேர் கைது!

வியாழன் 18, ஜூலை 2024 8:10:05 AM (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உள்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி கைமாறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதி சென்னைக்கு நேரடியாக வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்றைய இரவே கைது செய்யப்பட்டனர். 

11 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார். இதர 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால், போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை பணம் கைமாறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையாளி அருளின் வங்கி கணக்கில் மட்டும் ரூ.50 லட்சம் போடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மேலும், கொலையாளி அருளோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அவரது செல்போன் அழைப்பை வைத்து போலீசார் விசாரித்தார்கள். இந்த நிலையில் நேற்று பெண் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களில் கைதான பெண்ணின் பெயர் மலர்கொடி (வயது 45) என்றும், சென்னை பாடர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மலர்கொடி வக்கீலாக பணியாற்றுகிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கைதானவரில் மற்றொருவர் பெயர் ஹரிஹரன் என்றும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரும் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர திருநின்றவூரை சேர்ந்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதான அருளின் அக்காள் மகன் ஆவார். கொலையாளிகளுக்கு வாகனங்களை இவர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், போலீசார் கூறும்போது, கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது உண்மை என்றும், எவ்வளவு தொகை கைமாறியது என்பது குறித்து விசாரணை முடிந்த பின்னரே சொல்லப்படும் என்றும் தெரிவித்தனர். கைதான 2 வக்கீல்களும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory