» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு

வெள்ளி 19, ஜூலை 2024 5:35:23 PM (IST)



இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடி மதிப்பில் பழைமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்வதை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (19.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் கேரளா மாநிலத்துடன் இணைந்து இருந்த போது இரணியல் வட்டம் தலைநகராக இருந்ததோடு திருவிதாங்கூர் திவான் நாகம்அய்யா இரணியல் வேணாட்டரசர்களின் தலைமை நகரமாக இருந்தது. 

பத்மநாபபுரம் தலைநகரான பின்னர் இரணியல் இரண்டாம் நகரமாக இருந்தது. இரணியல் அரண்மனை மார்த்தாண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியினை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இளவரசர் முதலான வேணாட்டரசர்களும் அரச குடும்பத்தினரும் இரணியல் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே பிரமாண்டமாக இரு அடுக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

இரணியல் அரண்மனையில் அரசர் சயனிப்பதற்குரிய அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனைக் கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர் குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு.

பெரிய அரண்மனையின் முன்வாசல் வேலைப்பாடுடையது. இதன் கல்தூணில் செண்டேந்திய சாஸ்தாவின் சிற்பம் உள்ளது. இரு தலையுடைய கண்ட பேரண்ட பட்சி ஒன்று யானைகளை கால்களில் தூக்கிச் செல்லும் சிற்பமும் உள்ளது. அரண்மனை உள்பகுதியில் நாலுகட்டு வீடு, நடுவில் சிறு முற்றமும் நான்கு சுற்றுகட்டுகளும், பக்கவாட்டில் மூன்று அறைகளும் சமையலறையும் கொண்டது. சுற்றுக்கட்டு பகுதியில் மேல் மாடி உண்டு. மாடியில் ஓரத்தில் சிறு கழிவறை உள்ளது இப்பகுதி பெண்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம். மொத்தம் அரண்மனைச் சுற்றிலும் தாழ்வாரம் உண்டு. சுற்றுக்கட்டு பகுதிகளில் எண்பட்டைக் கொண்ட கல் தூண்கள் உள்ளன. மேல் கூரை ஓடுவேய்ந்தது. இந்த ஓட்டின் நீளம் அகலமும் கட்டுமான செங்கலின் அமைப்பும் இதன் பழமையை பறைசாற்றுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் முதல் இரணியல் அரண்மனை பராமரிப்பின்றி காணப்பட்டது. இரணியல் அரண்மனையை பழைமை மாறாமல் புனரமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 2013-2014-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-கீழ் 17,18 –ஆம் நூற்றாண்டு வேநாட்டு மன்னர்களின் இருப்பிடம் தமிழ்நாடு அரசு மானியம் நிதியின் கீழ் ரூ.3.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 13.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு 30.01.2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது. மேலும், 12.10.2020 அன்று ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொண்டு 12.12.2020 அன்று பணி துவங்கப்பட்டது. இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் எழுபது சதவீதம் (70%) நிறைவடைந்ததை தொடர்ந்து மீதம் முப்பது சதவீதம்(30%) பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரணியல் அரண்மனை கொண்டுவரப்படும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் இரணியல் அரண்மனையின் அருகாமையில் உள்ள திருக்கோவிலில் 2022-2023 சட்டமன்ற அரசாணையின் கீழ் 14.5 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு மேற்கொள்ளும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் இந்து சமய அறநிலையைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி செயற் பொறியாளர் ராஜகுமார், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம் ) இந்து சமய அறகாவலர் குழு உறுப்பினர் டி.ராஜேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory