» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்த்தாண்டத்தில் 23 புதிய பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

சனி 20, ஜூலை 2024 4:48:53 PM (IST)



மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி (லிட்) நாகர்கோவில் மண்டலம் சார்பில் இன்று (20.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பட் (விளவங்கோடு) ஆகியோர் முன்னிலையில் புதிய பேருந்து சேவையினை துவக்கி வைத்து பேசுகையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக அதற்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி, 7200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 1000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின் தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் 10 பேருந்துகள் மற்றும் கடந்த 15ஆம் தேதி அன்று திருவள்ளுர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்கள். 

இன்று மதுரை, விருதுநகர், கோவை, ஈரோடு, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் போது சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மே-2021 முதல் ஜூன்-2024 வரை 111 புதிய பேருந்துகளும், 249 புனரமைக்கப்பட்ட பேருந்துகளும் தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்கோவில் மண்டலத்தில் மட்டும் 50 புதிய பேருந்துகளும், 97 புனரமைக்கப்பட்ட பேருந்துகளும் அடங்கும். 2023-24 ஆம் ஆண்டில் 199 புதிய பேருந்துகளும், நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டில் 302 புதிய பேருந்துகளும் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 136 பேருந்துகள் நாகர்கோவில் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது அவற்றுள் இன்று 23 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் அவர்களால் 07.05.2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட முத்தான திட்டமான "மகளிர் விடியல் பேருந்துகள்" திட்டத்தில் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 816 நகர பேருந்துகளில் 660 நகர பேருந்துகள் மகளிர் விடியல் பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவில் மண்டலத்தில் மட்டும் 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறானாளிகளுடன் பயணிக்கும் உதவியாளர் மற்றும் திருநங்கைகள் பயனாளியாக அறிவிக்கப்பட்டு அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 2.89 லட்சம் பயனாளிகள் நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் பயன்பெற்று வருகிறார்கள். 

இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து அரசு நகரப்பேருந்துகளிலும் பெண்கள் இன்முகத்தோடு பயணிக்கும் நிலையை காண முடிகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் தினமும் 73 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்கின்றனர். இத்திட்டத்தில், நாகர்கோவில் மண்டலத்தில் இதுவரை சுமார் 24.82 கோடி மகளிர் கட்டணமில்லாமல் மகிழ்ச்சியுடன் பயணம் செய்துள்ளனர்.

மேலும், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் இரவும், பகலும் பாராமல் பணிபுரிவதால் 5% ஊதிய உயர்வை உயர்த்தி வழங்கியதோடு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரைவில் பணபலன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசுக்க பிடிக்காத சிலர் அரசுப் போக்கவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளை குறைத்து தனியார் பேருந்துகளை இயக்கப் போவதாக பொய்யான குற்றச்சாட்டினை கூறி வருகிறார்கள்அது முற்றிலும் தவறானதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். 

அதனைதொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து குளச்சல்-திண்டுக்கல், கன்னியாகுமரி-இராமேஸ்வரம், கன்னியாகுமரி-வேளாங்கண்ணி, கன்னியாகுமரி-சேலம், நாகர்கோவில்-தஞ்சாவூர், நாகர்கோவில்-திண்டுக்கல் மற்றும் பொன்மனை உள்ளிட்ட வழித்தடங்களில் செல்வதற்கான 23 புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் திருநெல்வேலி லிட்.) இளங்கோவன், பொது மேலாளர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (நாகர்கோவில் மண்டலம்) மெர்லின் ஜெயந்தி, குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி, முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், துணை மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங், குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன்,இந்து சமய அறநிலையத்துறை தலைவர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்ஸி லதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரெஜினி விஜிலா பாய்(கண்ணணூர்), கிறிஸ்டல் பிரேம குமாரி (கோதநல்லூர்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜாண் பிரைட் (கண்ணணூர்), ராஜ் (காட்டாத்துறை), ரெமோன் வழக்கறிஞர், சிவராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம்பிள்ளை, திருவட்டார் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ், தொழில் சங்க பிரதிநிதிகள் ஆல்பர்ட் பாபு, பிரவீன்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் , தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory