» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையோரம் வழியாக ஆரல்வாய்மொழிக்கு இருப்புபாதை: சர்வே செய்ய கோரிக்கை!

திங்கள் 22, ஜூலை 2024 11:17:27 AM (IST)



நெடுமங்காடு குலசேகரம் வழி மேற்கு தொடர்ச்சி மலையோரம் வழியாக ஆரல்வாய்மொழிக்கு ரயில்வே இருப்பு பாதை அமைக்க சர்வே செய்ய வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 73 கி.மீ தூரத்துக்கு இருப்புபாதைகள் ஆறு பிளாக் ரயில் நிலையங்கள், நான்கு ஹால்ட் ரயில் நிலையங்கள் உள்ளன.  இந்த இருப்பு பாதைகள் எல்லாம் 1979-ம் ஆண்டும் 1981-ம் ஆண்டு அமைக்கப்பட்டது ஆகும். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு புதிய இருப்புபாதையும் வழித்தடங்கள்  மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை

கேரளா அரசு அங்கமாலி-எரிமேலி சபரி வழித்தடத்தை பாலராமபுரம் வழியாக விழிஞம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை சர்வதேச விமான நிலையத்தை வழித்தடத்தில் இணைக்கும் வகையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டால், இந்த ரயில் பாதை மாநிலத்தின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மாற்றமாக இருக்கும் என்று கேரள அரசு கருதுகிறது. எருமேலியில் இருந்து விழிஞ்சம் வரை ரயில் பாதையை நீட்டிக்க மட்டும் ₹1,000 கோடி கூடுதல் செலவாகும் என ரயில்வே வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட திட்டத்தின்படி, சபரி பாதைக்கான செலவு ₹3,810 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டத்தை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க ரயில் முன்பு ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.  எருமேலியில் இருந்து ரானி, பத்தனம்திட்டா, பத்தனாபுரம், புனலூர், அஞ்சல், கிளிமானூர், வெஞ்சாரம்மூடு, நெடுமங்காடு, காட்டாக்கடை, பலராமபுரம் வழியாக விழிஞ்சம் வரை நீட்டிக்கப்படும்.  இந்த பாதை கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காட்டாகடைக்கும் வெள்ளரடை க்கும் இடைப்பட்ட இடம் வழியாக பாலராமபுரம் செல்ல இருக்கிறது. இந்த நிலையில்; இவ்வாறு வரும் இருப்பு பாதையை குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோரம் வெள்ளராடா, நெட்டா, சிற்றார் அணை, குலசேகரம்  ஊருக்கு வெளியே, கழியல், பொன்மனை ஊருக்கு வெளியே ,சுருளகோடு, தடிக்காரகோணம், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், வழியாக ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கொண்டு இணைக்கலாம்.

இந்த பாதையில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் செல்வதால் நிலம் ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சனை இருக்காது. ஒரு சில இடங்களில் வனத்துறையின் அனுமதியோடு வனப்பகுதி வழியாக  செல்லும். ஒரு சில இடங்களில் ரப்பர் எஸ்டேட் வழியாக இந்த பாதை செல்லும். இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க போவதில்லை. இவ்வாறு ரப்பர் தோட்டங்கள் வழியாக செல்லும் போது நமது மாவட்டத்தில் உள்ள ரப்பர் சார்ந்த பொருட்கள் ரயில் வழியாக ஏற்றி செல்ல சரக்கு போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் சுற்றுலா இடங்கள் உள்ளதால் சுற்றுலா சம்பந்தமான போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்

இந்த பாதை வருவதற்கு முதலில் கேரள அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தது போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.  தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்தால் மட்டுமே இந்த பாதை அமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும், எத்தனை தூரம் அமைக்க வேண்டியது வரும், எவ்வளவு நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிவரும், எந்த இடங்களில் எல்லாம் ரயில் நிலையம் இருக்கலாம் போன்ற விவரங்கள் கிடைக்கும்.

சென்னை மாகாண ஆங்கிலேய அரசின் காலகட்டத்தில் தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும், மணியாச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு புதிய மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைத்து 01-01-1876 அன்று முதல் பயணிகளின் பயன்பாட்டிற்காக ரயில்கள் இயக்கப்பட்டது. திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் வரை சமன் பரப்பாக இருந்தால் ரயில் மூலம் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் திருநெல்வேலி மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தால் நிர்வாக பிரச்சனை காரணமாக திட்டம் செயல்படுத்த முடியவில்லை. சுமார் 1900 களில்  தென்இந்திய ரயில்வே நிறுவனம்  தென்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தில் பணகுடி, ஆரால்வாய்மொழி வழியாக திருவனந்தபுரம் சென்னை மாகாணத்தின் இணைக்கலாம் என்று அதற்கு பிறகு திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கு ரயில் இணைப்பு நீட்டிப்பு செய்யலாம் என்று ஆய்ந்து இரண்டாவதாக ஒரு வழித்தடத்தையும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாதையை தான் மீண்டும் தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஆவண காப்பகங்களில் பழைய சர்வே அறிக்கை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரயில்வே துறை அந்த சர்வே அறிக்கையை தூசிதட்டி எடுத்து தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ள வழித்த்தையும் ஆராய்ந்து மாவட்டத்தில் உள்ள சாதாரண மக்கள் பாதிக்காதவாறு மக்கள் வசிக்காத இடம் பார்த்து மலை அடிவாரம் வழியாக ரப்பர் எஸ்டேட் அதிகம் உள்ள இடம் பார்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சபரிமலைக்கு நேரடியாக பாதை:

இந்த திட்டம் செயல்படுத்தும் போது கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் எளிதாக குறைந்த தூரம் வழியாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதை அமைக்கும் பட்சத்தில் கன்னியாகுமரியிலிருந்து இரணியல், குழித்துறை, பாலராமபுரம், வெள்ளராடா, நெட்டா, சிற்றார் அணை, குலசேகரம் ஆவுட்டர், கழியல், பொன்மனை அவுட்டர்,சுருளகோடு, தடிக்காரகோணம், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர்,  வழியாக ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் வழியாக சர்க்குலர் பயணிகள் ரயில் சேவையும் இயக்கப்படும்.

 மாவட்டத்தில் இரண்டாவது புதிய இருப்பு பாதை திட்டம்

குமரி மாவட்டத்தில் உள்ள அளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு (திருநெல்வேலி மாவட்டம்) 20.5 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடம் ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக சுசீந்திரம் விட்டுவிட்டு அங்கிருந்து தேரூர், மருங்கூர், அழகப்பபுரம், மைலாடி, அஞ்சுகிராமம் வழியாக செட்டிகுளம் செல்லுமாறு அமையும்.  இந்த ஆய்வில் இந்த திட்டம் செயல்படுத்த 403.48 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல் இந்த பாதையில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் சரக்கு போக்குவரத்து ஏதும் இருக்காது என்ற காரணத்தால் இந்த திட்டத்தின் வழியாக கிடைக்கும் ரேட் ஆப் ரிட்டன் -8.03 சதமானம் ஆகும். ரேட் ஆப் ரிட்டன் இவ்வளவு  குறைவாக இருக்கின்ற காரணத்தால் இந்த திட்டம் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் மற்றும் நிதிஆயோக் ஒரு புதிய ரயில்வே இருப்பு பாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு இந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். குறைவாக வருமானம் வரும் திட்டங்களை ஆய்வு கைவிட்டு விடுவார்கள்.  இந்த திட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளுக்கு வேண்டி சர்வே செய்யப்பட்ட திட்டம் ஆகும். குமரி மாவட்டத்தில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் பிற்காலத்தில் நாகர்கோவில் நகரத்தில் சென்னையில் இயங்குவது போன்ற புறநகர் ரயில்கள் இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது புதிய இருப்பு பாதை அமைக்கும் திட்டம்

கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து ; 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடி – தூத்துக்குடி  மைனஸ் -8.3% ரேட் ஆப் ரிட்டன்  ஆகவும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதை -8.88% டேட் ஆப் ரிட்டன்  ஆகவும் உள்ள காரணத்தால் ரயில்வே வாரியம் கிடப்பில் போட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு மேம்படுத்துதல் அறிவிக்கப்பட்டால் இந்த திட்டத்தின் டேட் ஆப் ரிட்டன்  அதிகரிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory