» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் : அண்ணாமலை

திங்கள் 22, ஜூலை 2024 4:54:18 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த மக்களவையில் தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கான பாராட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், மின் கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் வரும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். மேலும் திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையையும் அண்ணாமலை வெளியிட்டு பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கின்றோம்.

தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்கள் மின்சார கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டு பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.

குறிப்பாக திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. வரும் பட்ஜெட்டில் கோவை ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அந்த துறையின் மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை சிபிஐ இடம் மாற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக ஆகும்போது திமுகவின் நிலைமையை மக்களே அறிந்து கொள்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து திருச்சியில் நடந்த மாநாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர் என அண்ணாமலை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory