» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு!

செவ்வாய் 23, ஜூலை 2024 12:30:40 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுமாவடி காமராஜர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 11.07.2024 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்கள். ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களிடம் நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 15 அரசு துறைகளின் வாயிலாக வழங்கக்கூடிய 42 வகையான சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார்கள். அதுபோல அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினையும் விரைவில் செயல்படுத்த உள்ளார்கள். மேலும், பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை கொண்டு வந்ததுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களுக்கு சென்று மக்கள் மனு கொடுப்பதற்கு பதிலாக துறை அலுவலர்களே நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தந்துள்ளார்கள். பொதுமக்கள் இம்முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும். கிராமப்புற மக்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தந்து அவர்களுக்கு உதவி செய்கின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் விளங்கி வருகிறார்கள் என மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: மக்களுடன் முதல்வர் முகாமினை அரசின் பல்வேறு துறைகளின் சேவைகள் நேரடியாக பொதுமக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து மனுக்களைப் பெற்று சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இத்திட்டம் ஏற்கனவே நகர்ப்புறங்களில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது ஊரகப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 402 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 72 முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுவரை 23 முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு மக்களுடன் முதல்வர் மற்றும் முதல்வரின் முகவரி ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மனுக்கள்மீது அந்தந்த துறைகள் மூலமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 15 அரசு துறைகளின் வாயிலாக வழங்கக்கூடிய 42 வகையான சேவைகளுக்கு மனுக்கள் பெறப்படுகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்கள்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அளவில் கண்காணிக்கப்படுகிறது. 

எனவே இந்த முகாமினை நீங்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள மற்ற மக்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களின்மீதும் உரிய தீர்வு காண்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நாலுமாவடி காமராஜர் உயர்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மதிய உணவுகள், அதன் தரம், பொருட்களின் இருப்பு, பயன்பெறும் மாணவர்கள் மற்றும் வருகைப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்; சுகுமாறன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜனகர், ஏரல் வட்டாட்சியர் கோபால், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாக்கியம்லீலா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory