» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி குழந்தைகளுக்கு 2 செட் சீருடை வழங்கப்படும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் தகவல்!

வெள்ளி 26, ஜூலை 2024 11:05:16 AM (IST)



தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அனைத்து பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் 2 செட் சீருடைகள் வழங்கப்படும் என்று  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். 

தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு அரசு வழங்கும் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா இணை சீருடைகளை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தலைமையில் இன்று (26.07.2024) வழங்கி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 79,654 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படவுள்ளது. இந்த சீருடைகள் 1009 மகளிர் உறுப்பினர்கள் உள்ள 3 தையல் கூட்டுறவு அமைப்பின் மூலம் தைத்து வழங்கப்படுகிறது. மகளிர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிடும் வகையில் இந்த கூட்டுறவு செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சமூக நலத்துறையின் மூலம் தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள மகளிர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து பின்னர் நேரடியாக குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள்.  

தமிழ்நாடு முதலமைச்சர்  பொறுப்பேற்றதில் இருந்து எல்லா துறையிலும் மக்கள் நலப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான சீருடை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகள் இணைந்து சீருடையை முறையாக இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அனைத்து பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் 2 செட் சீருடைகள் வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்ததாவது: குழந்தைகள் கல்வி கற்பதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி எண்ணும் எழுத்தும் போன்ற  முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய கல்வி மிகவும் முக்கியம். ஏனென்றால் பின்னால் கற்கக்கூடிய கல்விக்கு அது அடிப்படையாக அமையும். இதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் ஆசிரியர்கள் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கான அடிப்படை கல்வியறிவு மேம்படும். அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டு கல்வி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.பெ.பிரேமலதா, மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், 9வது வார்டு உறுப்பினர் ஜெபஸ்டின்சுதா, உதவி கல்வி அலுவலர் சரஸ்வதி, தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் குரூஸ் மகேந்திரன் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory