» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பனிமய மாதாவுக்கு பொன்மகுடம் சூட்டும் நிகழ்வு : திரளான இறைமக்கள் வழிபாடு!

வெள்ளி 26, ஜூலை 2024 12:52:53 PM (IST)



தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு  பனிமய அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 442-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. தொடர்ந்து பகல் 12 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. 

பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்களை ஆயர் அணிவித்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. அன்னையின் பெருவிழா தினமான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணியளவில் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். 

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory