» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : உடற்கல்வி ஆசிரியர் கைது!
திங்கள் 11, நவம்பர் 2024 8:07:37 PM (IST)
உடன்குடியில் மதுபானம் கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சல்மா என்ற தனியார் மெட்ரிக்லேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு பள்ளியிலிருந்து மாணவிகளை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மறுநாள் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரவில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தூத்துக்குடியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது இரவில் மாணவிகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கியுள்ளார். அப்போது அறையில் தங்கி இருந்த மாணவிகளுக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகள் கட்டாயப்படுத்தி, மிரட்டி கொடுத்துள்ளார்.
பின்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் தொடர்ந்து மற்ற போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல மாட்டேன் எனவும் மாணவிகளை கூறி மிரட்டியுள்ளார். தொடர்ந்து மாணவிகளை சமாதானப்படுத்தி விளையாட்டுப் போட்டியில் விளையாட வைத்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாணவிகள் இதுகுறித்து பள்ளியில் உள்ள மற்றும் ஆசிரியர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியருக்கு சாதகமாக செயல்பட்டு அவரை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் மெதுவாக மாணவிகளின் பெற்றோர் உறவினர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்ட நிலையில் தற்போது உடற்கல்வி ஆசிரியரை கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சனை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தபட்ட உடற்கல்வி ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் பள்ளிக்கு குழந்தை நல அலுவலர் அலெக்ஸ், கல்வித்துறை அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்ததூர் டி.எஸ்.பி., வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பந்தபட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்ததும், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து பெற்றோர்கள் உடற்கல்வி ஆசிரியர், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மாணவிகளின் உறவினர்கள் பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியல் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உரக்கடை குணசேகரன், அமிர்தா மகேந்திரன், ராம்குமார் உள்ளிட்டு வரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதனிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்சிங் திருச்செந்தூர் அழைத்து வரப்பட உள்ளார். முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பொன்சிங்கை வேலையை விட்டு உடனடியாக நிறுத்தி விட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.