» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்னகத்தின் அடையாளமாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திகழ்கிறது : ஸ்ரீதர் வேம்பு புகழாரம்!
செவ்வாய் 12, நவம்பர் 2024 11:23:54 AM (IST)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தென்னகத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது என ஷோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பேசினார்.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 103-வது நிறுவனர் தின விழா தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலி எஸ். நாயர் தலைமை தாங்கினார். வங்கியின் பொது மேலாளர் பி.ஆர். அசோக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஷோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நெல்லை செய்யது நிறுவனங்களின் தலைவர் பாத்துரப்பானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அவர்களுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். முன்னதாக வங்கியின் நிறுவனர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஷோகோ நிறுவன நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பேசும் போது, "என்னுடைய ஷோகோ நிறுவனம் தொடங்கி 27 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியுடன் ஒப்பிடும் போது 4 மடங்கு வளர வேண்டி உள்ளது. இந்த வங்கியால் 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் கிடைத்து உள்ளது. பாரம்பரியம், உண்மை என்ற குறிக்கோள்களுடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தென்னகத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது புதிய சவால்கள் உருவாகி இருக்கிறது. வங்கி ஆன்லைன் மூலம் 2 நிமிடத்தில் கடன் வழங்கும் நடைமுறைகள் வந்து விட்டன. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சேவை சிறு, குறு தொழில் முனைவோரை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஷோகோ நிறுவனம் பல நாடுகளுடன் தொடர்பில் உள்ளது. கிராம வளர்ச்சியில் எங்கள் நிறுவனம் பங்களித்து வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
விழாவில் வங்கி இயக்குனர்கள் ஏ.நிரஞ்சன் சங்கர், எஸ்.ஆர். அசோக், பி.பிரபாகரன், சி.சிரஞ்சீவி ராஜ், எஸ்.எழில்ஜோதி, ஆர்.தீபக் சங்கர், ஆர்.கனகவள்ளி, வங்கியின் பொது மேலாளர்கள் ரமேஷ், விஜயன், ஜெயராமன், சுந்தரேஷ் குமார், லட்சுமணன், உதவி பொது மேலாளர் வெங்கடேசன், தூத்துக்குடி மண்டல மேலாளர் கெளதமன், தலைமை மேலாளர் கந்தசாமி, மற்றும் வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் மெகா லோன் மேளா நடந்தது. இதில் பல கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.