» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் இடி- மின்னலுடன் பலத்த மழை: சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

வியாழன் 14, நவம்பர் 2024 8:00:08 PM (IST)

நாகர்கோவிலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களாக பெய்யவில்லை. வழக்கம்போல வெயில் அடிக்க தொடங்கியது. அதே சமயம் நேற்று முன்தினம் மலையோர பகுதிகளில் சாரல் விழுந்தது. இந்தநிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில் மதியத்துக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் என அனைத்து இடங்களிலும் இடி-மின்னலுடன் மழை பொழிவு இருந்தது.

மேலும் திருவட்டாா், குலசேகரம், சிதறால், களியக்காவிளை, அருமனை ஆகிய இடங்களில் மிதமான மழையும், அதே சமயம் தக்கலை, கன்னியாகுமரி, அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி ஆகிய இடங்களில் சாரல் மழையும் பெய்தது.

நாகர்கோவில், புத்தேரி, சுங்கான்கடை, மயிலாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறி சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. மழை பெய்தபோது வானில் மின்னலும், இடியும் பயங்கரமாக இருந்தது.

இதனால் சிறுவா், சிறுமிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்குள் முடங்கினர். மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் அவ்வை சண்முகம் சாலை, செம்மாங்குடி ரோடு, கேப் ரோடு, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை என அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஓடியது. மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மழை தணிந்திருந்ததை தொடர்ந்து ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு பணிகள் நடைபெற்றது.இந்தநிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பால்வடிப்பு பணிகள் முடங்கியுள்ளது. இதனால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றாறு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால், அருவியில் 5-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையானது அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பாலமோர்-7.2, அடையாமடை-8, ஆனைகிடங்கு-46.4, சிற்றாா் 1-9.2, சிற்றார் 2-14, களியல்-8.2, பேச்சிப்பாறை-30.4, பெருஞ்சாணி-21.8, புத்தன்அணை-20.4, சுருளகோடு-4.2, திற்பரப்பு-15.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory