» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இசைவாணி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
செவ்வாய் 26, நவம்பர் 2024 4:18:52 PM (IST)
சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுப்படுத்துவதை முதல்-அமைச்சர் அனுமதிக்க மாட்டார். இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
இது குறித்து நிச்சயம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின், உறுதியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க கூடாது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.