» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
வியாழன் 28, நவம்பர் 2024 11:58:25 AM (IST)
லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட நகராட்சி ஆணையரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தொட்டபெட்டா சந்திப்புக்கு அருகில் ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்த மகிழுந்தை கடந்த 10-ம் நாள் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து ரூ.11.70 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதை நான்கு தரப்பினரிடமிருந்து அவர் வசூல் செய்து தமது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்ததற்காக ரூ.2.49 லட்சம், சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன நிறுத்த உரிமம் வழங்கியதற்காக ரூ.2 லட்சம், பாரதியார் வணிக வளாகத்தில் துணிக்கடையை உணவு விடுதியாக மாற்றியதற்காக ரூ.2.50 லட்சம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் வரியை குறைத்து நிர்ணயம் செய்ததற்காக ரூ. 4.71 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அவர் பயணம் செய்த மகிழுந்தை ஓட்டி வந்த ஓட்டுனரும் ஜஹாங்கீர் பாஷா கையூட்டு வாங்கியதை உறுதி செய்தார்.
ஜஹாங்கீர் பாஷாவுக்கு எதிராக இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரை சுதந்திரமாக நடமாட அனுமதித்த தமிழக அரசு, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இது அவர் ஏற்கனவே வகித்த பதவியை விட அதிகாரம் மிக்கதாகும்.
ரூ.500 கையூட்டு வாங்கியதற்காக பல கிராம நிர்வாக அலுவலர்களும், கடை நிலை ஊழியர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ரூ.11.70 லட்சம் கையூட்டு வாங்கியதுடன், அதற்கான சான்றுகளும் தெளிவாக இருக்கும் நிலையில் ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் மிக்க பதவியை வழங்குவதன் மூலம் தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன? இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழன்Nov 28, 2024 - 07:25:08 PM | Posted IP 172.7*****