» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெங்கல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 28, நவம்பர் 2024 4:11:10 PM (IST)
வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து இருப்பதாவது "தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மற்றும் நாளை காலைக்கு இடைப்பட்ட காலத்தில் தற்காலிக புயலாக உருவெடுக்கும். இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி காரைக்காலுக்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் கரையை கடக்கக்கூடும். வலுவான புயல் உருவாக வாய்ப்பு இல்லை. கரையை கடக்கும்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். 30-ந்தேதி கரையை கடக்கும்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது." இவ்வறு அவர் கூறினார்.