» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்!
வியாழன் 28, நவம்பர் 2024 5:55:35 PM (IST)
தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் இந்த வளாகத்தின் முதல் தளத்தில் கீழூர் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் வாங்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் இன்று மாலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பொறுப்பு வகித்து ஆரோக்கிய ராஜ் என்பவரிடம் அங்கிருந்த ஊழியர்களிடம் மற்றும் அலுவலகத்தில் இருந்த பத்திர எழுத்தர் கோமதி மற்றும் புரோக்கர் ஜோசப் ஆகியோரிடம் சோதனை செய்தனர்.
இதில் அலுவலக ஊழியர் ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத சுமார் 27 ஆயிரம் மற்றும் பணம் பெற்றுக் கொடுக்கும் புரோக்கராக செயல்பட்ட ஜோசப் என்பவரிடமிருந்து சுமார் ஒரு லட்சத்து 33ஆயிரம் என கணக்கில் வராத சுமார் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடைபெற்ற போது பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
DurkaNov 30, 2024 - 07:03:00 AM | Posted IP 162.1*****