» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் நிறுவனம் மூடல்: 144 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வந்தது!

ஞாயிறு 1, டிசம்பர் 2024 12:06:32 PM (IST)

தூத்துக்குடியில் 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ்பெற்ற மதுரா கோட்ஸ் மில் நிறுவனம் அனைத்து வகையான பணிகளும் முடிவுக்கு வந்தது. 

1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் (மதுரா கோட்ஸில்) வேலை பார்த்தால் பெண் கொடுத்து கல்யாணம் சீரும், சிறப்புடன் நடத்தி வாழ்ந்த எல்லா சமுதாயத்தின் - குடும்பங்கள் - பல ஆயிரங்கள் - இந்த ஊரில் பசுமையான நினைவுகளோடு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மணிக்கும் சைரன் ஒலி (ஊத்தம்) எழுப்பும் போதெல்லாம் தூத்துக்குடி மக்கள் வீட்டில் இருந்தபடியே அன்றைய தின நடப்பு நேரத்தை எளிதில் தெரிந்து கொள்வார்கள். இதைக்கேட்டு தூத்துக்குடி மக்கள் அன்றைய அவர்களது பணிகளை திட்டமிட்டு செய்து கொள்ளவார்கள். மில் தொழிலாளர்கள் பலரும் மில் கேன்டீனில் கிடைத்த தரமான குறைந்த விலை உணவு, சிற்றுண்டிகளையும் அன்று ரசித்து உண்ண முடிந்தது‌ . 

அதில் சாம்பார் வடையை மறக்கவே முடியாது . இதை மில் தொழிலாளர்கள் மறக்கவும் மாட்டார்கள். புகழ் பெற்று விளங்கிய மதுரா கோட்ஸ் மில் 144 ஆண்டுகள் கழித்து இந்த மண்ணை விட்டும், நம் மாநகர மக்களை விட்டும் பிரிந்து - மறைவது - நம்மால் மறக்க முடியாத நினைவுகளை விட்டு செல்கிறது . 

இந்நிறுவனத்தில் ஐஎன்டியுசி., என்எல்ஓ., திமுக., தொழிற்சங்கங்கள் மில்லுக்கு எதிரிலேயே சங்ககட்டிடங்கள் வைத்து தொழிலாளர்களின் பல தொழில் தாவாக்களுக்கு தீர்வு கண்டுள்ளார்கள் என்பதும் சரித்திர உண்மை. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் நிறுவனமான - ஸ்பின்னிங் மில் - சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த மண்ணை விட்டு வெளியேறியது, தற்போது மற்றொரு மில்லான மதுரா கோட்சும் வெளியேறிவிட்டது. இதை நம்பி வாழ்ந்த தொழிலாளர்களின் நிலமை இன்று கேள்விக்குறியாகிவிட்டதே. தூத்துக்குடியின் வளர்ச்சியில் மதுரா கோட்ஸின் பங்களிப்பு - வரலாற்றில் - பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். 


மக்கள் கருத்து

ராஜாDec 2, 2024 - 10:56:21 AM | Posted IP 172.7*****

தாத்தா, அப்பா இந்த ஆலையில் வேலை பார்த்தவர்கள் மனதிற்கு சற்று வருத்தம் அளிக்கிறது நன்றி

ரா. அழகியநம்பிDec 1, 2024 - 08:05:30 PM | Posted IP 162.1*****

மூன்று தலைமுறையாக மதுரை கோட்ஸில் பணியாற்றி விருப்ப ஓய்வில் ஓய்வு பெற்ற எனக்கு இச்செய்தி கலக்கம் தருகிறது. ஏற்கனவே இதன் சொத்துக்கள் சில உயர் அதிகாரிகளாலும்,தொழிற்சங்கவாதிகளாலும் சுரண்டப்பட்டது இதைவிட பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசுகளும் தடம்புரண்டு நடந்திருக்கிறது. இருந்தாலும் நானும் என் குடும்பத்தாரும் இன்று நலமாக வாழ்வதற்கு மதுரை கோட்ஸ் ஆலையை அஸ்திவாரம் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory