» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு : பெண் அதிகாரி-கணவருக்கு 3 ஆண்டு சிறை
சனி 7, டிசம்பர் 2024 8:37:01 AM (IST)
வருமானத்துக்கு அதிகமாக ரூ.25 லட்சத்துக்கு சொத்து சேர்த்த வழக்கில் தூத்துக்குடி பெண் அதிகாரி மற்றும் அவருடைய கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அமலா ஜெசி ஜாக்குலின் (59). இவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக இவர் பணியாற்றியபோது 1-12-1999 முதல் 31-3-2009 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.25 லட்சத்து 40 ஆயிரத்து 972-க்கு சொத்து சேர்த்ததாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் அவருடைய கணவர் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் மேற்பார்வையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று அவர் தீர்ப்பளித்தார்.
அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமலா ஜெசி ஜாக்குலின் மற்றும் அவருடைய கணவர் ராஜேஸ்வரன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.