» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சர் ஆகவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, டிசம்பர் 2024 5:03:48 PM (IST)
தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது நான் இப்போது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்றைக்கு நம்மளோட தான் இருக்கிறது" என்று கூறி இருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு பதிலடியாக திருமாவளவன் கூறுகையில், "தி.மு.க. அல்லது தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் நிகழ்ச்சி குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "சினிமா செய்திகளை பார்ப்பதில்லை" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மன்னர் ஆட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, "தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டுதான் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார். மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். அந்த அறிவு கூட இல்லையா அவருக்கு..? என்று காட்டமாக பதிலளித்தார்.