» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சம்பிரதாயத்துக்காக வெளியிடப்பட்ட புதிய கால அட்டவணை : ரயில் பயணிகள் ஏமாற்றம்!!

வியாழன் 2, ஜனவரி 2025 3:08:29 PM (IST)

ரயில்வே துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிட்டு வருகிறது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு புதிய கால அட்டவணை வெளியிடப்படவில்லை. 

கடந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்ற காரணத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வேண்டிய ரயில் கால அட்டவணை 2025 ஜனவரி 1-ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்வே காலஅட்டவணையில் புதிய அறிவிப்புகள் மற்றும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் கால அட்டவணை மாற்றம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக உள்ளது போன்று புதிய ரயில்கள் மற்றும் ரயில்கள் நீட்டிப்பு பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால் புதிய ரயில் கால அட்டவணையில் பெரிதாக ஒன்றும் இருக்காது. வெறும் சம்பிரதாயத்துக்காக வெளியிடப்பட்ட புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என்று அனைவருக்கும் தெரியும்.

தற்போது வெளியிடப்படும் கால அட்டவணையில் ஒருசில ரயில்களின் நேரத்தை ஐந்து அல்லது 10 நிமிடம் மாற்றுவார்கள். அடுத்த வருடம் அதே ரயில்களை மீண்டும் பழையபடி ஐந்து நிமிடம் அல்லது 10 நிமிடம் திரும்பவும் இரண்டு வருடங்களுக்கு முந்தைய நேரத்துக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறுதான் கடந்த சில ஆண்டுகளாக  நடந்து வருகிறது. 

ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில்களில் இருவழிபாதை முடிந்துள்ள நிலையில் ரயில்களின் பயணநேரத்தை குறைக்காவிட்டால் பிரச்சனை வரும் என்று கருதி நாய்க்கு பிஸ்கட் போட்டது போன்று ஒருசில ரயில்களின் பயண நேரத்தை குறைத்து உள்ளார்கள். இவர்கள் நினைத்தால் கணிசமான அளவில் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது அனைத்து முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் கொண்டு வர முடியும்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் இந்த ரயில் கால அட்டவணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. இதிலும் குறிப்பாக நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் எதிர்பார் பார்த்தபடி சென்னை செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவில்லை. ஒரே ஒரு ரயில் கன்னியாகுமரி – நிஜாமுதீன் திருக்குறள் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 80 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. (வேறு ஒன்றும் இல்லை இந்த ரயில் மேலபாளையத்தில் அதிக நேரம் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தற்போது அதை மாற்றம் செய்தார்கள். இது ரயிலின் பயண நேரத்தை குறைப்பது போன்று தோன்றும்.

நாகர்கோவில் -தாம்பரம் ரயில்கள் நாகர்கோவிலிருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு மீண்டும் பழைய நேரமான மாலை 05:05க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இது போன்று மற்ற குறிப்பாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் பெரிதாக குறைக்கப்படவில்லை. கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் நேரத்தை இரவு 7:00 மணிக்கு பிறகு புறப்படும் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது குறிப்பாக மாலை சூரியன் மறைந்த பிறகு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

புதிய ரயில்கள்: 

ரயில் கால அட்டவணையில் 2023-ம்; வருடம் நான்கு ரயில்களும் அதில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இதைப்போல் 2024-ம் வருடம் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டதில் மூன்று வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. புதிய வழித்தடங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய ரயில்களை இயக்குவதில் ரயில்வே துறை ஆர்வம் காட்டவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிறுத்தம்:

கடந்த கால கட்டங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 45 புதிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஒரு ரயில் நிறுத்தம் கூட இல்லை. இது மாவட்டத்தை புறக்கணிப்பதாக உள்ளது. கோரோனா காலத்துக்கு பின்பு  பல்வேறு ரயில்கள் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள. இந்த நிறுத்தங்களில் ஒருசில நிறுத்துவது மீண்டும் வரும் என்று குமரி மாவட்ட பயணிகள் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் புதிய நிறுத்தங்கள் ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை என்பது குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக உள்ளது. திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுத்தம் ரயில் கால அட்டவணையில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

இந்த ரயில் நிறுத்தம் வேண்டி பாராளுமன்ற உறுப்பினர் இந்த ஒரு கோரிக்கையை மட்டும் (வேறு எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல்) ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து கோரிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அங்கேயே இருந்து உடனடியாக ரயில் நிறுத்த ஆணையை வாங்கி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புறக்கணிக்கப்படுகிறதா கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்:

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களில் மிகமிக முக்கிய அதிக பிரபலமான ரயில் என்றால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் தற்போது வேண்டும் என்று முக்கியத்துவம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த ரயிலுக்கு முன்னால் சென்னை சென்றுவிடுகிறது.

தற்போது வெளியான கால அட்டவணையில் திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக மதுரை கோட்டம் சார்பாக நல்ல கால அட்டவணை அமைத்து பயண நேரத்தை வெகுவாக குறைந்து இயக்கப்படுகின்றது. திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலியிருந்து சென்னைக்கு 10 மணி 20 நிமிடங்களில் சென்று சேர்கிறது. ஆனால் திருநெல்வேலியிருந்து சென்னைக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் 10 மணி 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. திருநெல்வேலியிருந்து சென்னை வரை உள்ள இருவழி பாதையில் எந்த ஒரு கிராசிங் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரம்

திருநெல்வேலியிருந்து சென்னைக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம்

நாகர்கோவில் -சென்னை வந்தே பாரத் - 07:43 மணி நேரம்

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் - 7:50 மணி நேரம்

கன்னியாகுமரி – நிஜாமுதீன் திருக்குறள் -  10:05 மணி நேரம்

திருநெல்வேலி – சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் – 10:20 மணி நேரம்

கன்னியாகுமரி – சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் - 10:45 மணி நேரம்

கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ்  - 10:45 மணி நேரம்

கன்னியாகுமரி - ஹவுரா – 10:45 மணி நேரம்

குருவாயூர் - சென்னை – 11:25 மணி நேரம்

மற்ற  ரயில்கள் எல்லாம் வேறு வழி தடங்கள் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகின்ற காரணத்தால் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

நாகர்கோவில் - பெங்களுர் ரயில்:

நாகர்கோவிலிருந்து பெங்களுர் செல்லும் தினசரி ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு பயண நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை சார்பாக நாங்கள் பல்வேறு ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டோம் பயண நேரத்தை குறைத்து விட்டோம் என்று அரசியல் கட்சியினர் போல் வெத்து விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். ஆனால் பயணநேத்தை குறைந்த ரயில்களின் பட்டியல் பற்றி வெளியே தெரிவிக்க மாட்டோம். ரகசியமாக இந்த  நாகர்கோவில் - பெங்களுர் ரயில் பெங்களுர் செல்லும் 9:10 மணிக்கு பெங்களுர் சென்று இருந்த கால அட்டவணை மாற்றம் செய்து தற்போது 9:30 ஆக மாற்றம் செய்தார்கள். 

இது  பெங்களூரில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு சாதகமாக இந்த கால அட்டவணை மாற்றம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பாக இந்த ரயிலை காலை 7.30 மணிக்கு முன்பாக பெங்களுர் செல்லுமாறும் மாலை 7:00 மணிக்கு பிறகு பெங்களூரில் இருந்து புறப்படும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் தென் மாவட்டத்தில் இருந்து பெங்களுர் செல்லும் பயணிகளை வெகுவாக பாதிக்கிறது.

நாகர்கோவில்  -  சென்னை சென்ட்ரல்

நாகர்கோவிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர ரயிலும் கன்னியாகுமரி – நிசாமுதீன் வாராந்திர ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே கால அட்டவணையில் திருச்சி வரை இயக்கப்படுகிறது. ஆனால் நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் ரயில் நாகர்கோவிலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு வருகிறது.  ஆனால் திருக்குறள் ரயில் 55 நிமிடம் காலதாமதமாக 8:55 க்கு புறப்படுகிறது. 

இவ்வாறு இரண்டு ரயில்களும் முரண்பாடான கால அட்டவணையில் இயங்குகின்றது. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் ரயில் இரவு 8:55 மணிக்கு நாகர்கோவிலிருந்து எளிதாக இயக்கலாம். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைமேடை இடநெருக்கடி பிரச்சனை இருந்தால் எவ்வாறு பரசுராம் ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டதோ அதை போன்று இந்த ரயிலையும் கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்கலாம்.

கன்னியாகுமரி – புதுச்சேரி:

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கன்னியாகுமரி – புதுச்சேரி ரயிலின் கால அட்டவணை கன்னியாகுமரியிலிருந்து மாலை புறப்படும் படியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.  இந்த ரயில் மோசமான கால அட்டவணை காரணமாக பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் இயக்கப்படுகின்றது. கால அட்டவணை மாற்றம் செய்தால் அதிக வருவாய் தரும் ரயில்கள் பட்டியல் இந்த ரயில் வந்துவிடும்.

நாகர்கோவில் நடைமேடை இடநெருக்கடி:

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மொத்தம் உள்ள நான்கு நடைமேடைகள் மூன்று நடைமேடைகள் வழியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் என்று மூன்று மார்க்கங்களிலும் ரயில்களை இயக்க முடியும். நடைமேடை 1ஏ லிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் மட்டுமே ரயில்களை இயக்க முடியும். தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடை இடநெருக்கடியை உள்ளது. இந்த காரணத்தால்தான் மதுரை – புனலூர், சென்னை  குருவாயூர்;, அனந்தபுரி ஆகிய மூன்று ரயில்கள் நாகர்கோவில் டவுன் வழியாக மாற்றம் செய்து இயக்கப்பட்டது. 

இந்த இடநெருக்கடி காரணமாகத்தான்  ரயில்களின் கால அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். தற்போது நாகர்கோவில் புதிதாக இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory