» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
வெள்ளி 3, ஜனவரி 2025 10:16:33 AM (IST)
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை 2019 மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காட்பாடியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் இருந்து ரூ. 11 கோடி கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் நீட்சியாக அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம் தொடர்பாகவும் அமலாகத் துறை சோதனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகினர். அப்போது தொட்டே இவ்விவகாரத்தில் அமைச்சர் துரை முருகன் மீது அமலாக்கத் துறை விசாரணை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.